கணவரை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற மூதாட்டி
குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்
குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மதுபோதையில் தகராறு
கோவை சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகு என்ற லோகநாதன் (வயது 75). இவருடைய மனைவி தெய்வானை (65). இவர்களுக்கு மணிகண்டன் (33) என்ற மகன் உள்ளார்.
அவர் திருமணமாகி செட்டிவீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தெய்வானை அங்குள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.
மேலும் சில ஆடுகளை வைத்தும் மேய்த்து வருகிறார். லோகநாதன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் குடிப்பழக்கம் இருந்தது.
இதனால் அவர்கள் தினமும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். அவர்கள் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் ஒன்றாக மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலை
அப்போது லோகநாதன் தெய்வானையை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தெய்வானை அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் லோகநாதனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்த லோகநாதன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவரை கொன்றுவிட்டதால் தெய்வானை கதறி அழுது புலம்பினார். அதை கேட்டுஅக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது லோகநாதன் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டி கைது
இதையடுத்து போலீசார் தெய்வானையிடம் விசாரித்த போது குடிபோதையில் தன்னை கணவர் தாக்கியதால் உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்ததாக தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வானையை கைது செய்தனர். விசாரணையில் லோகநாதன் 2000-ம் ஆண்டு பிக்பாக்கெட் வழக்கில் சிக்கி பின்னர் திருந்தி வாழ்ந்ததும் தெரியவந்தது.