வீடு புகுந்து முதியவர் அடித்துக்கொலை


வீடு புகுந்து முதியவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2023 1:00 AM IST (Updated: 6 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், பட்டப்பகலில் வீடு புகுந்து முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். தூங்கிக்கொண்டிருந்தவரை தீர்த்துக்கட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

தூங்கி கொண்டிருந்த முதியவர்

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 72). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர், தனது குடும்பத்தினரை பிரிந்து திண்டுக்கல் பொன் சீனிவாசன் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று மதியம் 2 மணி அளவில் அந்தோணிசாமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டின் கதவு மூடப்படாமல் திரை விரிப்பு மட்டும் போடப்பட்டிருந்தது. அப்போது 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்தோணிசாமியின் வீட்டுக்குள் புகுந்தார்.

பின்னர் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த அந்தோணிசாமியை சரமாரியாக கடப்பாரையால் அடித்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. வலி தாங்க முடியாமல் அந்தோணிசாமி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அடித்துக்கொலை

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தோணிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அப்போது இறந்தவர் சாமியார் போன்று சுற்றித்திரிந்ததாகவும், பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

முன்விரோதம் காரணமா?

இதற்கிடையே கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கொலை சம்பவம் நடந்த வீட்டுக்குள் சென்று மோப்பம் பிடித்துவிட்டு, சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதேபோல் தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story