தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க டீசலுடன் வந்த முதியவரால் பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க டீசலுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 63). இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க இன்று வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முருகன் கொண்டு வந்த பையை சோதனையிட்டனர்.
அப்போது, ஒரு பாட்டிலில் டீசல் இருந்தது. இதுகுறித்து போலீசார் கேட்டபோது தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக டீசல் வாங்கி வந்ததாக அவர் கூறினார். பின்னர் அவரிடம் இருந்த டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், "எனக்கு 3 மகன்கள் உள்ளனர். என்னுடைய கடைசி மகன் என்னை கடைசி வரை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதால் அவருக்கு எனது பூர்வீக வீட்டை தானமாக எழுதிக்கொடுத்தேன். ஆனால், அவர் தற்போது என்னை பராமரிப்பது இல்லை. பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே, நான் தானமாக எழுதிக் கொடுத்ததை ரத்து செய்து அவரிடம் கொடுத்த சொத்துகளை எனக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்றார். பின்னர், அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்து சென்றார். இந்த சம்பவம், தேனி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.