கழுத்தை அறுத்து பெண் கொலை:தாக்கப்பட்ட முதியவர் பரிதாப சாவு


கழுத்தை அறுத்து பெண் கொலை:தாக்கப்பட்ட முதியவர் பரிதாப சாவு
x

பரமத்திவேலூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தாக்கப்பட்ட முதியவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதில் கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

மூதாட்டி கொலை

பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி நல்லம்மாள் (65). கணவன், மனைவி தனியாக வசித்து வந்தனர்.

கடந்த 12-ந் தேதி அதிகாலை சண்முகம் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த நல்லம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். சண்முகம் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு இரும்பு கம்பியால் தாக்கியதுடன், வெளி கதவை பூட்டி விட்டு சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய சண்முகத்தை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதன் பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

முதியவர் சாவு

இந்த சம்பவம் தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் திணறல்

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கொலையாளிகள் பற்றி இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்டதற்கான காரணமும் தெரியவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும், எனவே இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், அந்த பகுதி மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story