மயங்கி கிடந்த முதியவர் சாவு
பெண்ணாடம் அருகே மயங்கி கிடந்த முதியவர் இறந்தார்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே சுமார் 60 வயதுடைய முதியவர் மயங்கி கிடந்தார். இதுபற்றி அறிந்த பெண்ணாடம் போலீசார், அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, அவர் யார் என்பது குறித்து டாக்டர்கள் விசாரித்தனர். அதில், தான் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த குமார் (60) என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பொன்னேரி கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.