நெல்லை கொலை வழக்கில் திடீர் திருப்பம்: முதியவரை மகனே கல்லால் தாக்கி கொன்றது அம்பலம்
நெல்லையில் முதியவர் கொலை வழக்கில் அவரை மகனே கல்லால் தாக்கி கொன்றது அம்பலமானது. இதையடுத்து தப்பியவரை பிடிக்க கேரளாவுக்கு தனிப்படை விரைந்தது.
நெல்லையில் முதியவர் கொலை வழக்கில் அவரை மகனே கல்லால் தாக்கி கொன்றது அம்பலமானது. இதையடுத்து தப்பியவரை பிடிக்க கேரளாவுக்கு தனிப்படை விரைந்தது.
முதியவர் பிணம்
நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு பஸ்நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் முதியவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
அப்போது ஒரு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியில், ராஜபாளையத்தில் இருந்து நெல்லைக்கு வந்த பஸ்சில் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு பஸ் நிறுத்தத்தில் முதியவர் உள்பட 2 பேர் இறங்கி சென்றது தெரிந்தது.
மேலும் மற்றொரு கேமராவில், பஸ்சில் இருந்து முதியவருடன் இறங்கி சென்ற நபர், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 கார்களுக்கு இடையே முதியவரை அழைத்து சென்று, அவரது கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்த பதைபதைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
உடல் நலக்குறைவு
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 73) என்பது தெரியவந்தது.
இவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மாரிமுத்துவை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு குடும்பத்தினரிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
கல்லால் தாக்கி...
இதையடுத்து மாரிமுத்துவின் மகன் கடல்கன்னி (46) தனது தந்தையை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக பஸ்சில் அழைத்து வந்தார். இதற்காக நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு பஸ் நிறுத்தத்தில் அவர்கள் 2 பேரும் இறங்கினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த கடல்கன்னி தனது தந்தையை சாலையோரம் இரு கார்களுக்கு இடையே அழைத்து சென்று, அவரை கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்தது தெரிய வந்தது.
கேரளாவுக்கு தனிப்படை விரைவு
இதையடுத்து தப்பிச்சென்ற கடல்கன்னியை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனனர். கடல்கன்னி ஏற்கனவே கேரளா மாநிலத்தில் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். எனவே அவர் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
நெல்லையில் முதியவர் கொலை வழக்கில் அவரை மகனே கல்லால் தாக்கி கொன்றது அம்பலமானது பரபரப்பை ஏற்படுத்தியது.