முதியவரை மரத்தில் கட்டிப்போட்டு ரூ.6 லட்சம் வெண்பன்றிகள் திருட்டு
அறந்தாங்கி அருகே முதியவரை மரத்தில் கட்டிப்போட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெண்பன்றிகளை திருடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தகராறு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 68). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டின் அருகே வெண்பன்றி பண்ணையை நடத்தி வருகிறார். இந்தநிலையில், காரைக்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் அழகப்பனிடம் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் பணம்- கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாண்டியனிடம் வியாபாரம் செய்ய அழகப்பன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
வெண்பன்றிகள் திருட்டு
நேற்று முன்தினம் நள்ளிரவு அழகப்பன் தனது பண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பன்றிகள் சத்தம் கேட்டு அவர் எழுந்து பார்த்தபோது பாண்டியன் மற்றும் அவருடன் வந்த 3 மர்ம ஆசாமிகள் பண்ணையில் இருந்த வெண்பன்றிகளை சரக்கு வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அழகப்பன் அவர்களை தட்டி கேட்டபோது அவர்கள் அழகப்பனை தாக்கி அங்கிருந்த மரத்தில் அவரை கட்டி வைத்தனர்.
பின்னர் பண்ணையில் இருந்த 2 பெரிய வெண்பன்றிகள் மற்றும் 30 குட்டிகளை சரக்கு வாகனத்தில் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதையடுத்து, நேற்று காலை பண்ணைக்கு வந்த பொதுமக்கள் அழகப்பனை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து அழகப்பன் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி சப்- இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மரத்தில் கட்டிப்போட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெண்பன்றிகளை திருடிய பாண்டியன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.