பாம்பு பிடிக்க கிணற்றில் இறங்கிய முதியவர் மேலே வர முடியாமல் தவிப்பு
வேடசந்தூர் அருகே பாம்பு பிடிக்க கிணற்றில் இறங்கி மேலே வரமுடியாமல் தவித்த முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வேடசந்தூர் அருகே உள்ளது வைரக்கவுண்டனூர். இதே ஊரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 85). விவசாயி. அதே பகுதியில் அவருக்கு விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் சுமார் 100 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இதில் 10 அடிக்கு மட்டும் தண்ணீர் இருந்தது.
நேற்று தோட்டத்துக்கு சென்ற மாணிக்கம், அந்த கிணற்றுக்குள் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்தார். உடனே அந்த பாம்பை பிடிக்க கயிறு கட்டி கிணற்றுக்குள் அவர் இறங்கினார். பின்னர் அந்த பாம்பை பிடிக்க முயன்றார். அவரால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து கிணற்றில் இருந்து அவர் மேலே வர முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இந்தநிலையில் தோட்டத்துக்கு சென்ற மாணிக்கத்தை காணவில்லை என்று குடும்பத்தினர் தேடி வந்தனர். அப்போது கிணற்றுக்குள் அவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்ேபரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மாணிக்கத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.