பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து இயக்க செயல்பாடுகள் பற்றியும், மாநில பொருளாளர் இளங்கோ நிதியும், பொது நிகழ்வு பற்றியும் பேசினர்.
கூட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தேர்வு குழுவில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டமைக்கு முதல்- அமைச்சருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப் பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப் பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில அமைப்பு செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.