பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வு ஊதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வு ஊதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் நாச்சியப்பன் வரவேற்று பேசினார். அந்தோணிசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். செயலாளர் ஜெய பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில துணைத்தலைவர் செல்வகுமார் மாவட்ட பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாவட்ட பொருளாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பெனிடிக் மைக்கேல், பூமிராஜ், குமரேசன், இளஞ்செழியன், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் நிறைவு உரையாற்றினார்.
கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசின் காலியிடங்களில் பணியமர்த்த வேண்டும்.
ஓய்வூதியம்
மேலும் அவர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாத காலம் வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். மக்கள் நல பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். அத்துடன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு 41 மாதம் பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர வீட்டு வாடகைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.