மகன் பிணத்துடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மூதாட்டி


மகன் பிணத்துடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மூதாட்டி
x

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மகன் பிணத்துடன் 3 நாட்கள் மூதாட்டி இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர்


கோவையில் தற்கொலை செய்து கொண்ட மகன் பிணத்துடன் 3 நாட்கள் மூதாட்டி இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் இருந்து துர்நாற்றம்

கோவை ஆவாரம்பாளையம் வள்ளி நகரை சேர்ந்தவர் சிபி சுப்பிரமணியம் (வயது 43). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தாயார் வசந்தா (68). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததுடன், நடக்க முடியாமல் உள்ளார். இதனால் சிபி சுப்பிரமணியம் தனது தாயாரை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. மேலும் வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிபி சுப்பிரமணியம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், அவரது தாயார் வசந்தா மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 நாட்களாக அவர் சாப்பிடாததால் மயங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுறித்து போலீசார் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட சிபி சுப்பிரமணியத்தின் தாயார் வசந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் இருந்ததால் மகன் இறந்தது தெரியாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு 3 நாட்களாக உணவு கிடைக்காததால் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிபி சுப்பிரமணியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்தது கூட தெரியாமல் பிணத்துடன் மூதாட்டி ஒரே வீட்டில் இருந்த சம்பவம் கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story