குளவி கொட்டி மூதாட்டி பலி
கே.வி.குப்பம் அருகே பேரனை காப்பாற்றிய மூதாட்டி குளவி கொட்டி இறந்தார்.
குளவி கொட்டியது
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த அங்கராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் யசோதா (வயது 69). இவர் தன்னுடைய பேரனுடன் வயலுக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது பனை மரத்தில் இருந்து ஓலை ஒன்று கீழே விழுந்தது. அந்த ஓலையில் குளவிகள் கூடு கட்டியிருந்தன.
அந்த கூடுகள் உடைந்ததால் குளவிகள் வெளியேறின. இதைக்கண்ட யசோதா, பேரனை குளவி கொட்டிவிடாமல் தடுக்க, தன்னுடைய சேலையால் பேரனை மூடி பாதுகாத்தார். அப்போது பறந்துவந்த குளவிகள் யசோதாவின் உடல் முழுவதும் கொட்டின.
மூதாட்டி சாவு
இதில் அவரது உடல் முழுவதும் வீங்கி, மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்உதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக, வேலூர் அரசு மருத்துவ வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, யசோதா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். பேரனை காப்பாற்ற முயன்று மூதாட்டி உயிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.