கியாஸ் சிலிண்டா் ெவடித்ததில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது


கியாஸ் சிலிண்டா் ெவடித்ததில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கொந்தகை பெருமாள் கீழவீதியை சேர்ந்தவர் முகமது யூசுப்(வயது 75). டிரைவரான இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனது வேனில் அழைத்து சென்று வருகிறார்.

நேற்று காலை முகமது யூசுப் வீட்டிற்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டரை மின்மோட்டார் மூலம் தனது ஆம்னி வேனில் உள்ள சிலிண்டருக்கு மாற்றி உள்ளார். அப்போது சிலிண்டர் குழாயில் கியாஸ் கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் முகமதுயூசுப் மீது தீப்பிடித்தது. இதனை பார்த்த வீட்டில் இருந்த அவரது மனைவி மைமூன் சரிபாகனி(68), பேத்தி ஜெசிரினா(17), பேரன் முகமது ரையான்(7) ஆகிய 3 பேரும் பின்புறமாக வீட்டில் இருந்து வெளியே ஓடி விட்டனர்.

ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

ஆம்னி வேனில் பிடித்த தீ அருகில் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், வீடுகளிலும் பரவியது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்னி வேன், 3 மோட்டார் சைக்கிள்கள், 1 சைக்கிள், வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் பேட்டரி, கட்டில், பீரோ உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

விசாரணை

இதுகுறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி, திருமருகல் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் தீக்காயம் அடைந்த முகமது யூசுப் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story