ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை சேர்ந்தவர் மோகன். இவர் நேற்று மார்க்கெட் வழியாக ஆம்னி வேனை ஓட்டி வந்தார். அப்போது பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேனிற்கு பெட்ரோல் நிரப்ப உள்ளே வந்த போது, திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்னி வேனில் இருந்து கீழே இறங்கினார். அதற்குள் வேன் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து ஆம்னி வேனை அருகில் நின்ற கிரேன் மூலம் அங்கிருந்து சிறிது தூரத்திற்கு பொதுமக்கள் இழுத்து சென்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஆம்னி வேனிற்கு பெட்ரோல் நிரப்ப வந்த போது வேன் திடீரென்று தீப்பிடித்தது தெரியவந்தது. இதற்கிடையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வைத்து ஆம்னி வேன் தீப்பிடித்த நிலையில் பொதுமக்கள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அதிர்ஷ்டவசமாக மோகன் உயிர் தப்பினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.