கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்தி கொள்வதுதான் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
காவேரிப்பாக்கம்,
கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவ கல்லூரி
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான். ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 91 சதவீதம், இரண்டாம் தவணை செலுத்தி கொண்டவர்கள் 74 சதவீதம், 12 வயதிற்கு மேற்பட்டவருக்கான முதல் தவணை 89 சதவீதம், இரண்டாம் தவணை 71 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இல்லாத நிலை இருந்து வருகிறது. தமிழக முதல்வரின் இலக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பதுதான்.
கட்டமைப்பு வசதி
ராணிப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கலில் கட்டமைப்பு மேம்படுத்துவதற்கு ரூ.13 கோடியே 87 லட்சத்திற்கான திட்டங்கள் செயல்படுத்த தொடங்கி இருக்கிறோம். ரூ.5 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றல் செய்ய புதிய மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரகப் பகுதிகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் இரண்டு துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.64 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.
ரூ.82 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் பாராஞ்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள், ரூ.20 லட்சத்தில் அருகிலபாடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கான குடியிருப்பு கட்டப்படவுள்ளது. ராணிப்பேட்டை சுகாதார துறையில் மூன்று மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நல அலுவலராக தரம் உயர்த்தப்படவுள்ளது.
புகையிலை கட்டுப்பாட்டு மையம்
ரூ.1 கோடியே 20 லட்சத்தில் ஆற்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதியகட்டிடம், ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தில் அரக்கோணம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
ரூ.7 கோடியே 73 லட்சத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இலக்கை அடைவதற்கு ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும். ரூ.67 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 48 சுகாதார நிலையங்கள் நல வாழ்வு மையங்களாக தரம் உயர்த்தப்படும். ரூ.6 லட்சத்தில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, சுகாதாரத்துறை இயக்குனர் வேதநாயகம், கோட்டாட்சியர் பூங்கொடி, நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.