பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Jan 2023 6:45 PM GMT)

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று(திங்கட்கிழைை) நடக்கிறது. இதையொட்டி பிரசித்தி பெற்ற திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கடமுடையான் கோவிலில் காலை திருப்பள்ளி எழுச்சியுடன் கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலை 5.15 மணிக்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன் ரத்தின அங்கியில் பெருமாள் எழுந்தருளி காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் அறிவுறுத்தலின் பேரில் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடாச்சலம் செட்டியார், கோவில் செயல் அலுவலர் பாலசரவணக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரைக்குடி பழைய, புதிய பஸ் நிலையம், தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமியநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது.

முன்னதாக பகல் பத்து உற்சவ விழா நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசிைய முன்னிட்டு உற்சவர் பெருமாள் காலையில் சயன அலங்காரத்திலும், இரவு 8 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சியளிக்கிறார். தொடர்ந்து வேதவிண்ணப்பம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கப்பட்டு தினமும் மாலை 5 மணிக்கு பெருமாள் எழுந்தருளி காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.

திரளான பக்தர்கள்

தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கிய பகல் பத்து விழா ேநற்றுடன் நிறைவு பெற்றது. அதேபோல் இன்று முதல் ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது.

இன்று வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியுடன் விழா தொடங்கி காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story