தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் -எடப்பாடி பழனிசாமி


தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
x

தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், 1968-ம் ஆண்டு நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் சுமார் 4,311 ஹெக்டேர் நிலப்பரப்பில், தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிப்புப் பணியை மட்டுமே செய்து வந்த, தாயகம் திரும்பிய ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரமாக, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகம் அமைக்கப்பட்டது.

தாயகம் திரும்பிய தமிழர்களின் 45 ஆண்டு கால உழைப்பிலும், பல கோடி ரூபாய் அரசின் நிதியை கொண்டும் உருவாக்கப்பட்ட இத்தேயிலை தோட்ட கழகத்தை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது உழைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட டான்டீ நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 5,317 ஏக்கர் தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தி.மு.க. அரசு.

குற்றச்சாட்டு

தற்போதைய வனத்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உள்ளது என்றும், எனவே இவரது சுய லாபத்திற்காக அரசு தேயிலை தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றி டான்டீ தொழிற்சாலையையே மூடும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது தேயிலை தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான, தேயிலை பயிரிடப்பட்ட நிலங்களை வனத்துறைக்கு மாற்ற ஆணை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

தொழிலாளர்கள் நிர்க்கதி

இச்சூழ்நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட டான்டீ நிறுவனத்திற்குச் சொந்தமான குடியிருப்புகளை காலி செய்தால்தான் அவர்களது ஓய்வு காலப் பலன்கள் வழங்கப்படும் என்று நிர்வாகம் தற்போது நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கடந்த, 45 ஆண்டுகளுக்கும் மேலாக டான்டீ நிறுவனமே கதி என்று உழைத்த தொழிலாளர்கள், இந்த அரசு வெளியிட்ட ஒரே அரசாணையின் மூலம் இன்று நடுத்தெருவில் நிர்க்கதியாக நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய போராட்டம்

எனவே, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், தாயகம் திரும்பிய தமிழ் சகோதரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், 45 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தும், இன்னும் சொந்த வீடுகூட இல்லாத தொழிலாளர்களுக்கு, அ.தி.மு.க. அரசு உருவாக்கிக் கொடுத்ததைப் போல சொந்த வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், அ.தி. மு.க. சார்பில் மக்களின் ஆதரவுடன் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story