மாற்றுத்திறனாளி மாணவிக்கு அசல் சான்றிதழ் திரும்ப கிடைத்தது; நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை


மாற்றுத்திறனாளி மாணவிக்கு  அசல் சான்றிதழ் திரும்ப கிடைத்தது; நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை
x

மாற்றுத்திறனாளி மாணவிக்கு நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கையால் அசல் சான்றிதழ் திரும்ப கிடைத்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே மேல குன்னத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகேசன் மகள் இசக்கியம்மாள். இவர் நெல்லை நிரந்திர மக்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதில், ''மாற்றுத்திறனாளி மாணவியான நான் பி.காம். படித்து உள்ளேன். என்னிடம் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்கள் சேர்க்கும் சிலர் எம்.பி.ஏ. படிப்பதற்கு சீட் வாங்கி தருவதாக கூறி, என் அசல் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழை பெற்று கொண்டனர். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எனக்கு சீட் கிடைத்தது. ஆனால் நான் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதால் அவ்வளவு தூரம் சென்று படிக்க முடியாது என்று தெரிவித்து எனது சான்றிதழ்களை திரும்ப கேட்டேன். கல்லூரிக்கும் பலமுறை சென்று கேட்டுவிட்டேன். ஆனாலும் எனது அசல் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து நீதிபதி சமீனா, கல்லூரி முதல்வருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொண்டார். அப்போது கல்லூரி நிர்வாக மேலாளர் ஆஜராகி அசல் சான்றிதழ்களை ஒப்படைத்தார். அந்த சான்றிதழ்களை நீதிபதி சமீனா, மாற்றுத்திறனாளி மாணவி இசக்கியம்மாளுக்கு நேற்று வழங்கினார். நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் 2 மாதத்துக்குள் மாணவிக்கு அசல் சான்றிதழ்கள் பெற்று கொடுக்கப்பட்டது.


Next Story