வெளி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர்


வெளி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அமைதி திரும்பியதை தொடர்ந்து வெளி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் அமைதி திரும்பியதை தொடர்ந்து வெளி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

போலீசார் வரவழைப்பு

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனால் கோவை நகரில் பதற்றமான நிலை நிலவியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க சேலம், நாமக்கல், வேலூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இதுதவிர வெள்ளலூரில் உள்ள மத்திய அதிவிரைவுப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் உள்ளிட்டடோரும் வரவழைக்கப்பட்டு மாநகர் முழுவதும் 5 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டனர். சுங்கம்-உக்கடம் பைபாஸ் ரோடு, சுந்தராபுரம், குனியமுத்தூர், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்டனர்

கோவைக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கோவையில் அமைதி திரும்பியதை தொடர்ந்து வெளி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

கோவையில் கடந்த 2 வாரங்களாக பாதுகாப்பு பணியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசார் உள்பட 3 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். தற்போது கோவையில் அமைதி நிலவுகிறது. இதனையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பாதுகாப்பிற்காக வந்த போலீசார் திரும்பி சென்றனர். தற்போது கோவையில் 8 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் உள்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க முக்கிய இடங்களில் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story