ரூ.13 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 10 லட்சம் ரூபாயை இழந்த டிராவல்ஸ் உரிமையாளர்


ரூ.13 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 10 லட்சம் ரூபாயை இழந்த டிராவல்ஸ் உரிமையாளர்
x
தினத்தந்தி 3 Aug 2023 1:00 AM IST (Updated: 3 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:-

ரூ.13 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 10 லட்சம் ரூபாயை டிராவல்ஸ் உரிமையாளர் இழந்தார். அவரிடம் நூதன முறையில் கைவரிசை காட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிராவல்ஸ் அதிபர்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர், டிராவல்ஸ் அதிபர். சுரேஷிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ரூ.10 லட்சம் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.13 லட்சம் தருவதாக கூறினர்.

உடனே ரூ.10 லட்சத்துக்கு பதில் ரூ.13 லட்சம் கிடைக்கிறது என்ற ஆசையில் சுரேசும் சம்மதம் தெரிவித்தார். உடனே ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் கூறிய நல்லம்பள்ளி வாரச் சந்தை அருகே ஒரு பேக்கரி முன்பு நின்றார்.

ரூ.10 லட்சம் பறிப்பு

அந்த கும்பலிடம் ரூ.10 லட்சத்தை சுரேஷ் கொடுத்தார். உடனே அவர்கள் ரூ.13 லட்சம் இருப்பதாக கூறி ஒரு பெட்டியை அவரிடம் கொடுத்து விட்டு உடனே மின்னல் வேகத்தில் காரில் தப்பி சென்றனர். சிறிது தூரம் சென்ற சுரேஷ், அவர்கள் கொடுத்த பெட்டியை பார்த்த போது அதில் இருந்தவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதைக்கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் சுரேஷிடம் ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் கைவரிசை காட்டியது பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி (35), கோபாலம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story