விலைக்கு தண்ணீரை வாங்கி பாய்ச்சியும் நெல் முழுமையாக விளைச்சல் வில்லை-விவசாயிகள் வேதனை


விலைக்கு தண்ணீரை வாங்கி பாய்ச்சியும் நெல் முழுமையாக விளைச்சல் வில்லை-விவசாயிகள் வேதனை
x

விலைக்கு தண்ணீரை வாங்கி பாய்ச்சியும் நெல்கள் முழுமையாக விளையவில்லை எனவும், நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி

விலைக்கு தண்ணீரை வாங்கி பாய்ச்சியும் நெல்கள் முழுமையாக விளையவில்லை எனவும், நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விவசாய பணிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குவார்கள். அது போல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கினார்கள். இதேபோல் சாயல்குடி அருகே கடலாடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், ஓடைகுளம், கொத்தங்குளம், சிக்கல், ஆயக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் நெல் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடலாடி தாலுகாவுக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பருவமழை முழுமையாக பெய்யாததால் கொத்தங்குளம், ஆயக்குடி, ஓடைக்குளம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் இந்த ஆண்டு நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஓடைக்குளம், ஆயக்குடி, கொத்தங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் நெற்பயிர்களுக்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயிர்களை காப்பாற்றி உள்ளனர்.

முழுமையான விளைச்சல் இல்லை

இதுகுறித்து ஓடைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, இந்த ஆண்டு பருவ மழை முழுமையாகவே பெய்யவில்லை. சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக ஒவ்வொரு ஏக்கருக்கும் செலவாகியுள்ளது.

மழை பெய்யாததால் கண்மாயில் தண்ணீர் இல்லாத காரணத்தால் நெற்பயிர்கள் வளர்வதற்கும், விளைச்சலுக்கும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சியுள்ளோம். இதனால் கூடுதலாக ரூ.7 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு நெற்பயிர்கள் முழுமையான விளைச்சல் இல்லாமல் சாவியாகவே உள்ளன.

கோரிக்கை

நெல்லுக்கும் இதுவரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த பகுதியைச் சுற்றி பல கிராமங்களிலும் ஜோதி மட்டை ரகத்தை சேர்ந்த நெற் பயிர்களை பயிரிடப்பட்டன. இதுவரையிலும் விலை நிர்ணயம் செய்யப்படாததால் ஏமாற்றம் தான். ஆகவே விலை கொடுத்து தண்ணீர் வாங்கி ஓரளவு விளைந்துள்ள நெல் ரகத்திற்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலாடி தாலுகாவை சுற்றிய அனைத்து கிராமங்களிலுமே இந்த ஆண்டு நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் அரசு நெல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். அதுபோல் ஓடைக்குளம், கொத்தங்குளம், ஆயக்குடி, கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட பல கிராமங்களிலும் கதிரடிக்கும் களம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story