கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்


கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்
x

கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலாளர் காலால் எட்டி உதைத்தார். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம். இந்த ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விவசாயி அம்மையப்பன் என்பவர், கிராம சபை கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் வெவ்வேறு கிராமங்களில் நடத்த வேண்டும். மேலும் ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும் என கூறினார்.

விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர்

அப்போது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் எழுந்து வந்து காலால் அம்மையப்பனை எட்டி உதைத்து தாக்கினார். இதில் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

காந்தி ஜெயந்தியன்று பொதுமக்களின் குறைகளுக்காக போடப்பட்ட கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கப்பாண்டியன் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மான்ராஜ் எம்.எல்.ஏ. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பணியிடை நீக்கம்

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கப்பாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அம்மையப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story