தீவட்டிப்பட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் பெற்றோர் திடீர் போராட்டத்தால் பரபரப்பு


தீவட்டிப்பட்டியில்  பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள்  பெற்றோர் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
x

தீவட்டிப்பட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

ஓமலூர்,

சுற்றுச்சுவர்

தீவட்டிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தீவட்டிப்பட்டி நைனாகாடு காடையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததால் உரிய பாதுகாப்பு இன்றி உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் மதுப்பாட்டில்கள், புகையிலை மற்றும் சிகரெட் துண்டுகள் பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் மொட்டை மாடி மற்றும் படிக்கட்டுகள், இரு வகுப்பறை கட்டிடங்களுக்கு இடையே உள்ள காலியிடங்களில் கிடக்கிறது. இதனால் பள்ளிக்கு சுற்று சுவர் வசதி வேண்டி பெற்றோர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பசையை வைத்து அடைத்தனர்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் பூட்டப்பட்ட நிலையில் பூட்டினை திறக்க முடியாத அளவிற்கு பூட்டின் சாவி போடும் துவாரத்தில் பசையால் வைத்து அடைத்து விட்டு சென்றுள்ளனர். அப்போதே பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் அந்த பகுதி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் 5 அறைகளுக்கு பூட்டினை உடைத்து விட்டு வேறு பூட்டினை வாங்கி போட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இதே போல் நேற்று காலை பள்ளியின் தலைமைஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அவரது அறை பூட்டு மற்றும் வகுப்பறை பூட்டுகளை திறக்க முயன்ற போது சாவி போடும் துவாரத்தில் பசை போட்டு ஒட்டியிருந்தது.

இந்த நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்த நிலையில் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் வராண்டாவிலேயே அமர்ந்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தபள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் தீவட்டிப்பட்டி பகுதி மக்கள் பள்ளிக்கு வந்தனர்.

போராட்டம்

இதுபோல் தொடர்ந்து பள்ளி வகுப்பறை பூட்டில் பசை வைத்து அடைத்தவர்களையும் பள்ளி வளாகத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை பூட்டை உடைக்க கூடாது என கூறி திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது பற்றி தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததின் பேரில் மீண்டும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை பூட்டு மற்றும் வகுப்பறை பூட்டுகள் உடைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் வகுப்பறையில் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.

கதவு பூட்டுக்கு பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story