அரையாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்


அரையாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டு தேர்வில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் காலாண்டு தேர்வுகளில் தேர்ச்சி விகிதங்கள் குறைவாக இருந்த பள்ளிகளில், அதற்கான காரணங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மாணவ- மாணவிகள் பள்ளிக்கு முறையாக வருகை புரியாமல் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 10-ம் வகுப்பில் 469 பேரும், 12-ம் வகுப்பில் 295 பேரும் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தனிப்பயிற்சி

ஆசிரியர் இல்லாத இடங்களில் மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் பணி புரிவதால் தனிக்கவனம் செலுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களிடம் அதற்கான காரணங்களை கேட்டறிந்து, மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்்கு போதிய பயிற்சி வழங்க கலெக்டர் கேட்டுக்கொண்டார். வேலைக்கு செல்லும் மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து, அவர்கனை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை கட்டாயம் அதிகரிக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்க வேண்டும். மந்தமாக உள்ள மாணவர்களுக்கு தனிப்பயிற்சி அளிப்பதுடன், வாட்ஸ் அப் மூலம் கேள்வி பதில்கள் அனுப்பி தொடர்ந்து பயிற்சி வழங்க வேண்டும்.

அதிகரிக்க வேண்டும்

இதற்கு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதத் தேர்விலும் குறைந்தபட்சம் 5 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து இருக்க வேண்டும். உடனடியாக முழு தேர்ச்சியை எட்ட முடியாது. சிறிது சிறிதாக தொடர் முன்னேற்றம் இருக்க வேண்டும். எதிர்வரும் வரும் அரையாண்டு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்க வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, மோகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story