ஆழியாறில் அமைதி பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது


ஆழியாறில் அமைதி பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:46 PM GMT)

ஆழியாறில் இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரச்சினை தொடர்பாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறில் இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரச்சினை தொடர்பாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது.

அமைதி பேச்சுவார்த்தை

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் இலங்கை அகதிகளுக்கு புதிதாக தலா ரூ.5 லட்சம் செலவில் 317 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பு கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்கிடையில் அந்த இடத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தை ஆழியாறில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த இடத்திற்கு பதிலாக இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு வேறு இடத்தை தேர்வுசெய்ய வேண்டும் என்று கோட்டூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மனமகிழ் மன்றத்தை இடிக்க சென்ற போது, பொதுமக்கள் அந்த பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார் மாரீஸ்வரன், ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியம், கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் ஆனந்தன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன் மற்றும் போலீசார், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேறு இடம் கொடுக்க வேண்டும்

கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தற்போது இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆழியாறில் வசிக்கும் பொதுமக்கள் திருவிழாக்கள், விளையாட்டு போட்டிகள் நடத்த பயன்படுத்தி வருகின்றனர். எனவே குடியிருப்பு கட்டுவதற்கு போலீஸ் நிலையம் அருகில் உள்ள இடத்தை வழங்கலாம். எனவே பொதுமக்களிடம் கருத்து கேட்டு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் புதிதாக இடம் தேர்வு செய்து கொடுக்க 4 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்த சப்-கலெக்டர் பிரியங்கா கூறுகையில், குடியிருப்பு கட்டும் இடத்தில் உள்ள மனமகிழ் மன்றம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் போலீஸ் நிலையம் அருகில் அணை இருப்பதால் அங்கு இடம் ஒதுக்குவது பாதுகாப்பாக இருக்காது. மேலும் பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்த வேறு மைதானம் ஏற்பாடு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது குடியிருப்பு கட்டும் இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. எனவே இதற்கு காலஅவகாசம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

பாதியில் முடிந்த கூட்டம்

இதற்கிடையில் கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் திடீரென்று எழுந்து, கலெக்டரிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறோம் என்று கூறி புறப்பட்டு சென்றார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பொதுமக்கள், நிர்வாகிகளும் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் பாதியில் எழுந்து சென்றதால் கூட்டம் பாதியில் முடிவடைந்தது. இதன் காரணமாக கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.


Next Story