அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்


அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்
x

செய்யாறு அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய பள்ளங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் போக்குவரத்து மிகுந்த பிரதான செய்யாறு -காஞ்சீபுரம் சாலையில்

வடபூண்டிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் 7 கல்குவாரியும், 3 கிரஷர்களும் செயல்பட்டு வருகிறது. தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் சட்ட விரோதமாக அதிக பாரங்களான பெரிய, பெரிய கற்கள் மற்றும் ஜல்லி, எம்சாண்ட் ஏற்றிச்செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் பிரதான சாலை சந்திப்பில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதோடு அந்த இடத்தில் லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் சாலையில் கொட்டி சிதறிகிடப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.

சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை கூறியும், அந்த வழியாக செல்லும் லாரியின் உரிமையாளர்களோ அல்லது கல்குவாரியின் உரிமையாளர்களோ சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

லாரிகள் சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூசி மற்றும் செய்யாறு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தனர்.

அப்போது பொதுமக்கள் அரசு விதிகளை மதிக்காமல் லாரிகளில் அளவுக்கு அதிகமாக கற்கள் மற்றும் ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்டவைகளை ஏற்றிச் செல்வதால் பிரதான சாலை சந்திப்பு வளைவில் லாரிகளில் இருந்து ஜல்லி மற்றும் எம்சாண்ட் கொட்டி கிடக்கிறது.

அச்சாலையில் வாகனங்கள் செல்லும் போது எம்சாண்ட் காற்றில் புகை மண்டலம்போல பறப்பதால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் செய்யாறு -காஞ்சீபுரம் சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் சாலையில் கொட்டிக்கிடக்கும் ஜல்லி கற்கலிலும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்திலும் சிக்கி விபத்திற்கு ஆளாகின்றனர் என்று கூறினர்.

அதற்கு போலீசார் இன்னும் 2 நாட்களில் சேதமடைந்த சாலையை சீர் செய்து தருவதாக கல்குவாரி உரிமையாளர் தெரிவித்ததாக போலீசார் கூறியதையடுத்து லாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story