கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

கீழ்பென்னாத்தூர் அருகே கடனை திருப்பி கேட்டவருக்கு கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 39). இவர் ஜோதி பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்துக் கொண்டு பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவரிடம் ஜோதி பூமார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் நடத்தி வரும் பள்ளித்தெருவைச் சேர்ந்த மணி என்பவர் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று மாலை மணியிடம் பணத்தை திருப்பி தருமாறு ராஜீவ்காந்தி கேட்டுள்ளார். அப்போது மணி கீழ்பென்னாத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பள்ளிகொண்டாப்பட்டில் உள்ள உறவினரிடம் பணம் வாங்கித் தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.
அப்போது பள்ளிகொண்டாப்பட்டில் உள்ள ஆலமரத்தடியில் மோட்டார்சைக்கிளை நிறுத்திய மணி ராஜீவ்காந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜீவ்காந்தியின் வாய், மார்பு, வயிறு, முதுகு போன்ற இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த ராஜீவ்காந்தி திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணியை தேடி வருகின்றனர்.