சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ வெளியிட்டவர் கைது
சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 44). இவர், தி.மு.க.வில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர், திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சமூக வலைதளமான டுவிட்டரில் ரஞ்சித்குமார் என்ற ரஞ்சித் என்பவருக்கு திருநின்றவூர் கொசவன்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த பூபதி (32) என்பவர் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தை பற்றியும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதி குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த புகாரின் பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி வெளியிட்ட வீடியோ பதிவுகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். பின்னர் பூபதியை கைது செய்து, அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.