அரசு ஊழியராக நடித்துமோசடி செய்தவர் கைது


அரசு ஊழியராக நடித்துமோசடி  செய்தவர் கைது
x

அரசு ஊழியராக நடித்துமோசடிசெய்தவர் கைது

கோயம்புத்தூர்

கோவை,

தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற பணம் வசூலித்து அரசு ஊழியராக நடித்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

துணை தாசில்தார் புகார்

கோவை வடக்கு துணை தாசில்தாராக இருப்பவர் லட்சுமி நாராயணன். இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு முகாமில் ஜார்ஜ் மேத்யூ என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். அவருக்கு வாரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதில் அவரது தங்கை எலிசபெத்தின் திருமணம் குறித்த தகவல்கள் தவறாக இடம் பெற்று இருந்தது. இதனையடுத்து மீண்டும் வாரிசு சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்தி தருமாறு ஜார்ஜ் மேத்யூ கேட்டார்.

ரூ.5 ஆயிரம் வசூல்

இந்த நிலையில் சின்ன தடாகம் அருகே உள்ள வீரபாண்டியை சேர்ந்த கேசவமணி (47) என்பவர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்ப்பதாக கூறி வாரிசுச் சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்வதற்கு ரூ 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறி ஜார்ஜ் மேத்யூவிடம் ரூ 5 ஆயிரம் வாங்கி உள்ளார். அவர் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.தன்னை அரசு ஊழியர் எனக்கூறி ரூ 5 ஆயிரம் பெற்று ஏமாற்றிய கேசவமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியராக நடித்து ஜார்ஜ் மேத்யூவிடம் பணம் மோசடி செய்த கேசவ மணியை கைது செய்தனர். மேலும் இவர் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தாரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story