மின்வாரிய ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தவருக்கு வலைவீச்சு


மின்வாரிய ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தவருக்கு வலைவீச்சு
x

டிரான்ஸ்பார்மர் அருகே இருந்த பள்ளத்தை மூட முயன்ற மின்வாரிய ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் கல்லூரி அருகே 25 ஆண்டுகளாக தமிழ்நாடு டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றி தரும்படி ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஹரிசந்திரன் (வயது 55) என்பவர் வடமதுரை துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் விண்ணப்பித்தார். டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான தொகையை மதிப்பீடு செய்து உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஹரிச்சந்திரனிடம் கூறினார்.

ஆனால், அந்த தொகை அதிகமாக உள்ளது என்று கூறி விட்டு ஹரிச்சந்திரன் சென்று விட்டார். இந்நிலையில், டிரான்ஸ்பார்மர் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக ஹரிச்சந்திரன் பள்ளத்தை தோண்டியதாக தெரிகிறது. இதனால் டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்து விடும் என்று அந்த பகுதி மக்கள் மின்வாரிய உதவி பொறியாளருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து பள்ளத்தை மூட முயன்றனர். ஆனால், ஹரிச்சந்திரன் மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவான வார்த்தைகளால் பேசி பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கார்த்திகேயன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story