வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்தியவர் அதிரடி கைது
கள்ளக்குறிச்சி அருகே கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிய வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்தியவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு கருக்கலைப்பு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது
கள்ளக்குறிச்சி
பொதுமக்கள் புகார்
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் மையம் செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. ஆனால் இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து இது தொடர்பாக சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்க அலுவலகத்துக்கு புகார் சென்றது.
அதன்பேரில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சரவணக்குமார், கமலக்கண்ணன் ஆகியோர் கள்ளக்குறிச்சி வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு கர்ப்பிணியை மலைக்கோட்டாலத்தில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு அனுப்பி வைத்து கண்காணித்தனர்.
கையும், களவுமாக பிடித்தனர்
சில நிமிடங்களுக்கு பின்னர் அதிகாரிகள் குறிப்பிட்ட ஸ்கேன் மையத்துக்குள் திடீரென நுழைந்தனர். அப்போது அங்கு ஒரு பெண்ணுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து கொண்டிருந்த வடிவேல்(வயது 45) என்பவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் இருந்து ஸ்கேன் கருவி, மடிக்கணினி மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கலை சேர்ந்த வடிவேல் என்பவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வீட்டில் பல மாதங்களாக கரு கண்டறியும் மையம் நடத்தி கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறுவதும், மேலும் மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்து வந்ததும் தெரிய வந்தது.
கைது
இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர். மேலும் கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்தியநாராயணன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் அந்த ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் உடன் இருந்தார்.