திருமானூர் ஒன்றிய அலுவலகத்தில் வைத்திருந்த பொருட்களை திருடியவர் கைது
திருமானூர் ஒன்றிய அலுவலகத்தில் வைத்திருந்த பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருட்டு
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய அலுவலகத்தில் முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவர் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒன்றிய அலுவலகம் அருகே அரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் இரும்பு கதவு, தட்டு ஓடுகள், கழிவறைக்கு பயன்படுத்தும் பீங்கான் பேசன் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 3 பேர் அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கதவு, தட்டு ஓடுகள், கழிவறைக்கு பயன்படுத்தும் பீங்கான் பேசன் ஆகியவற்றை திருடி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியராஜ், அவர்களை பிடிக்க முயற்சித்தார். அப்போது அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
கைது
இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் சத்யராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது மேலவரப்பன்குறிச்சியை சேர்ந்த அந்தோணிராஜ் (37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் மற்றும் குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.