மதுரையின் வளர்ச்சிக்கு திட்டக்குழு முக்கிய பங்காற்ற வேண்டும்- அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரையின் வளர்ச்சிக்கு திட்டக்குழு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
மதுரையின் வளர்ச்சிக்கு திட்டக்குழு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
ஆலோசனைகள்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். மாவட்ட திட்டக்குழுத்தலைவர் சூரிகலா கலாநிதி தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, கூடுதல் கலெக்டர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் மூர்த்தி ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட திட்டக்குழு என்பது மாவட்ட ஊராட்சிக் குழுவின் ஒரு அலகாகும். ஒரு மாவட்டத்தின் வளர்ச்சியில் மாவட்ட திட்டக்குழுவின் பங்கு முக்கியமானது. இந்த குழுவின் தலைவராக மாவட்ட ஊராட்சித் தலைவரும், துணைத்தலைவராக கலெக்டரும் செயல்படுவார்கள். இதன் உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் நலன் சார்ந்து மாவட்ட முழுமைக்கான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து மாநில திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது இந்த குழுவின் முக்கியக் கடமை ஆகும்.
திட்டப்பணி
அந்த வகையில், மதுரை மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டத்தில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி. மதுரை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை தயார் செய்து சிறப்பாக பணியாற்றிட மாவட்ட திட்டக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பான திட்டப் பணிகளை செயல்படுத்துவோம். மதுரையின் வளர்ச்சிக்கு திட்டக்குழு முக்கிய பங்காற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.