விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்
திருக்கோவிலூர் அரசு பெண்கள் பள்ளி எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருக்கோவிலூர்
விளையாட்டு மைதனம்
திருக்கோவிலூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு மைதானம் உள்ளதே தவிர அதில் விளையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஒரே ஒரு கூடைப்பந்து ஆடுகளம் மட்டும் உள்ளது. அதுவும் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது.
மைதானம் அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்தும், குப்பைகள் நிரம்பியும் காட்சியளிக்கின்றன. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் இந்த மைதானம் பயனற்ற நிலையில் காணப்படுகிறது.
மாணவர்கள் கோரிக்கை
இதற்கிடையே திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய திருக்கோவிலூர் நகராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லாத நிலை காணப்படுகிறது. இருக்கிற மைதானத்திலும் எந்த ஒரு அடிப்படை வசதி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் விளையாட்டு உபகணரங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய உரிய துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.