விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி சாவு


விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி தாவரவியல் பூங்காவில் விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

குடும்ப தகராறு

நீலகிரி மாவட்டம் ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 36). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்லும் ஜெய்சங்கர், ஒரு வாரம் வரை அங்கேயே தங்கி இருந்து பணிகளை முடித்துவிட்டு ஊட்டிக்கு வந்து உள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஜெய்சங்கர் தனது மனைவியை பிரிந்து வசித்து வந்தார். இந்தநிலையில் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த போது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த திருமணமான ராதா என்பவருடன் ெஜய்சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ராதாவை 2-வது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் தந்தையுடன் ராதா இருப்பதை பார்த்த, ஜெய்சங்கரின் மகன்கள் தந்தையிடம் பேசாமல் இருந்து வந்தனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த ஜெய்சங்கர் வருத்தத்தில் இருந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் அவர் ராதாவுடன் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றி பார்க்க சென்று உள்ளார்.

அங்கு ஜெய்சங்கரும், ராதாவும் விஷம் குடித்து உள்ளனர். பின்னர் அவர்கள் பூங்காவில் மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் கடந்த வாரமும், ராதா நேற்றும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து ஊட்டி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாவரவியல் பூங்காவில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story