விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையை அடுத்த ஓவரூர் வெள்ளாங்கால் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜராஜன் (வயது50). தொழிலாளி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் குத்தகை நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. ராஜராஜன் தனக்கு சொந்தமான நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த நிலத்தை குத்தகைக்கு வாங்கிய செல்வம் நிலத்தை உழவு செய்துள்ளார். இதை அறிந்த ராஜராஜன் யாரை கேட்டு இங்கு சாகுபடி செய்கிறாய் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செல்வம் தரப்பினர் ராஜராஜன், அவரது சகோதரர் ராஜவர்மன் ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் மனமுடைந்த ராஜராஜன் விஷத்தை குடித்து மயங்கினார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜராஜன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் ஒவரூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி (32). விவசாயி. இவர் குடும்பத்தில் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக கடந்த 21-ந்தேதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.