அடிப்பகுதியில் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் மின்கம்பம்


அடிப்பகுதியில் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் மின்கம்பம்
x

அடிப்பகுதியில் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் மின்கம்பம்

தஞ்சாவூர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் அடிப்பகுதியில் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளதை அதிகாரிகள் கவனித்து மாற்றுவார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாஞ்சிக்கோட்டை சாலை

தஞ்சை மாநகரில் உள்ள முக்கியமான சாலைகளில் நாஞ்சிக்கோட்டை சாலையும் ஒன்று. இந்த சாலையின் வழியாக நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், ஒரத்தநாடு, கறம்பக்குடி, புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு அரசு பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அதிகஅளவில் சென்று வருகின்றன. இதனால் பகல் நேரங்களில் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

மேலும் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் அந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். இந்த நாஞ்சிக்கோட்டை சாலையில் பாத்திமாநகர் பஸ் நிறுத்தம் எதிரே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து அருகில் உள்ள கடைகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலை

மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து ஓட்டை விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அப்பகுதியை சேர்ந்த கடை வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்கம்பத்தை மாற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது தஞ்சையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையின்போது காற்றும் வேகமாக வீசுகிறது. காற்றுடன் மழை பெய்யும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மின்கம்பம் முறிந்து விழுந்தால் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்வயர்களும் அறுந்து விழுவதுடன் அந்த நேரத்தில் சாலையில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பு

எனவே தானாக மின்கம்பம் முறிந்து விழுவதற்கு முன்பாக இந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை வைக்க சம்பந்தப்பட்டதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story