கோவை மாநகர பகுதியில் வீதிகள்தோறும் நூலகம் திறக்கும் திட்டம்- போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
கோவை மாநகர பகுதியில் வீதிகள் தோறும் நூலகம் திறக்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு திட்டமான வீதிகள்தோறும் நூலகம் தொடங்கும் திட்டம் தொடக்க விழா கோவை அம்மன் குளத்தில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் நடந்தது. இதில் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் அந்தப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அத்துடன் அவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, கோவை மாநகர பகுதிகளில் 100 இடங்களை தேர்வு செய்து வீதிகள்தோறும் நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது-. மேலும் குடியிருப்புவாசிகளுடன் கமிட்டி அமைத்து போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். அதுபோன்று போலீஸ் பாய்ஸ் கிளப்புகளை மீண்டும் சீரமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் துணை கமிஷனர் சிலம்பரசன் மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.