பள்ளி மாணவிகளை மீட்க உதவி புரிந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு


பள்ளி மாணவிகளை மீட்க உதவி புரிந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு
x

சேலத்தில் மாயமான பள்ளி மாணவிகளை மீட்க உதவி புரிந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 3 மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால் மாணவிகள் 3 பேரும் வகுப்பறையில் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேலம் மாநகரம் முழுவதும் போலீஸ் உஷார்படுத்தப்பட்டு மாணவிகள் எங்கு உள்ளார்கள்? என்று அவர்களை தேடுதல் வேட்டை நடந்தது.

இந்நிலையில், மாயமான மாணவிகள் 3 பேரும் ஓமலூர் பஸ் நிலையம் பகுதியில் நிற்பதாக மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு மாணவிகளை பார்த்த அரசு பஸ் டிரைவர் பெரியசாமி, கண்டக்டர் அன்பழகன் ஆகியோர் சூரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வரும் வரையிலும் பத்திரமாக மாணவிகளை பாதுகாத்து அவர்களை மீட்க உதவியதற்காக டிரைவர், கண்டக்டரை நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தனது அலுவலகத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, உதவி கமிஷனர்கள் நாகராஜன், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story