திருவண்ணாமலையில் ஏ.டி.எம். கொள்ளை எதிரொலி:விக்கிரவாண்டி , உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை
திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் எதிரொலியாக விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை வெட்டி ரூ.72½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் அருகில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் வாகன சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் முக்கிய சந்திப்புகள், சுங்கச்சாவடிகளில் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்களை மறித்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, துரைராஜன், மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி, மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர், தியாகதுருகம், சின்னசேலம் உள்பட மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.