விபத்து நஷ்டஈடு வழக்கில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


விபத்து நஷ்டஈடு வழக்கில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 27 July 2023 2:30 AM IST (Updated: 27 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

விபத்து நஷ்டஈடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெரியகுளம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தேனி

விபத்து நஷ்டஈடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெரியகுளம் கோர்ட்டு உத்தரவிட்டது.

விபத்து நஷ்டஈடு வழக்கு

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இருசக்கர வாகன மெக்கானிக். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி தனது ஊரில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருச்சி-சென்னை சாலையில் அவர் வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்த முருகனின் மனைவி கவிதா விபத்து நஷ்டஈடு கேட்டு பெரியகுளம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக, விபத்து நடந்த காலக்கட்டத்தில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர், கோர்ட்டில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. 3 முறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் ஆஜராகவில்லை.

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

இந்தநிலையில் விபத்து நஷ்டஈடு வழக்கு பெரியகுளம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், விசாரணைக்கு ஆஜராகாத, ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யுமாறும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story