விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த வழுதாவூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி(வயது 65). விவசாயியான இவர் சம்பவத்தன்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மதியம் 2.30 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 2½ பவுன் சங்கிலி ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மண்ணாங்கட்டி வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.