பொதுமக்கள் பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரை குடிக்க வைத்த போலீசார்
கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க பொதுமக்கள் பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரை குடிக்க வைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க பொதுமக்கள் பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரை குடிக்க வைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
குறை தீர்க்கும் முகாம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டரிடம் மனு அளிக்க பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணி இருந்த போலீசார் பரி சோத னை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நபர் தண்ணீர் பாட்டிலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது.
இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்களில் சிலர் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்தனர்.
பாட்டில் தண்ணீரை குடித்தனர்
அப்போது அவர்களை சோதனை செய்த போலீசார், தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரை குடித்து காண்பித்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி சிலர் தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரை குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க சென்றனர்.
இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அல்லிமுத்து என்பவர் தனது 2 குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டது.
இதில் முதுகுத்தண்டு வடம் மற்றும் கை, கால்களில் பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடிய வில்லை.
இதனால் வீட்டு செலவு மற்றும் எனது 3 குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன்.
எனவே அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.கோவை வைசியாள் வீதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை கலெக்டர் சமீரனிடம் மனு அளிக்கப்பட்டது.