பற்களை பிடுங்கிய விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்-கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு


பற்களை பிடுங்கிய விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்-கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு
x

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு வழங்கினர்.

திருநெல்வேலி

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு வழங்கினர்.

பல்வேறு கட்சியினர் மனு

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் கனி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் மற்றும் பல்வேறு கட்சியினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து, தமிழ்நாடு காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் என்ற பெயரில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

போலீஸ் அதிகாரி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பை முன்னாள் போலீஸ் உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. பற்கள் பிடுங்கப்பட்ட நாட்களில் காட்சி பதிவுகள் திட்டமிட்டு போலீசாரால் அழிக்கப்பட்டு உள்ளன. அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். அவை சரியாக செயல்படுவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பு கலெக்டருக்கு உள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பல்வீர்சிங் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்த பிறகும் அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் வேதனைக்குரியது. இந்த வழக்கில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங்கை உடனே கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story