கைதான தம்பதியின் 10 அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனை


கைதான தம்பதியின் 10 அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனை
x

கைதான தம்பதியின் 10 அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனை

கோயம்புத்தூர்

கோவை

நிதி நிறுவனம் நடத்தி ரூ.1¾ கோடி மோசடி செய்த வழக்கில் கைதான தம்பதியின் 10 அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ரூ.1¾ கோடி மோசடி

நீலகிரி மாவட்டம் கூடலூர் கே.கே. நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது41). இவருடைய மனைவி சாரதா (35). இவர்கள் 2 பேரும் ஆகாஷ் சுருதி ஸ்பைஸ் இந்தியா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 8 முதல் 12 சதவீத வட்டி தருவதாக தெரிவித்தனர்.

தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு பல உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஒரு முதலீட்டாளர் ரூ.1 லட்சத்தை செலுத்தினால், நிறுவனம் 24 மாதங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் திரும்பக் கொடுக்கும் எனறும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் முதலீட்டாளருக்குத் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதனை நம்பி இந்த நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணம் செலுத்தினார்கள்.கோவை, நீலகிரி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இந்த நிதி நிறுவனங்களின் அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் வசூலித்தனர்.

சில மாதங்கள் மட்டும் ஊக்கத்தொகை கொடுத்துவிட்டு, அதிக வாடிக்கையாளர்கள் சேர்ந்ததும் துரைராஜூம், அவருடைய மனைவி சாரதாவும் தலைமறைவாகிவிட்டனர்.

தம்பதி கைது

பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். தலைமறைவாக இருந்த தம்பதியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர்கள் மீது முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாத்தல் சட்டப்பிரிவு 5, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்கள் 66 பேரிடம் ரூ1 கோடியே 85 லட்சம் மோசடி செய்தது முதல்கட்டவிசாரணையில் தெரியவந்தது. மேலும் பலர் பணம் செலுத்தி ஏமாந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்தநிறுவனத்துக்கு சொந்தமான கோவை சிங்காநல்லூர், துடியலூர் பகுதிகளில் உள்ள 4 அலுவலகங்கள், நீலகிரி மாவட்டத்தில் 4 அலுவலகம், சேலம் மற்றும் சென்னையில் தலா ஒரு அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

வீட்டு பூட்டை உடைத்து சோதனை

துரைராஜ், சாரதாவின் சொந்த ஊரான நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் கே. கே. நகரில் உள்ள அவர்களது வீட்டில் நேற்று காலை 8 மணிக்கு பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

பூட்டி கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மோசடி செய்த பணம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் ஏதும் உள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.

10 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பொதுமக்களிடம் பணம் வசூலித்த விவரம், ஆன்லைன்பதிவுகள், மற்றும் ஆவணங்கள், கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

மோசடி வழக்கில் கைதான துரைராஜூம், அவருடைய மனைவி சாரதாவும் மோசடி செய்த தொகையை எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளனர்? என்று விசாரணை நடத்தி கைப்பற்ற 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அனுமதி பெறப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story