வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி:டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை


வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி:டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:46 PM GMT)

வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

மாணவன் பலி

குலசேகரம் பொன்மனை அருகே உள்ள சமாதிநடையைச் சேர்ந்தவர் சதீஸ்குமார், வெளிநாட்டில் வேலை ெசய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி. இவர்களுடைய மகன்கள் சபரிநாத் (வயது 9), சூரியநாத் (7) ஆகியோர் குலசேகரம் படர்நிலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் 2 பேரும் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு மாலையில் வேனில் வீடு திரும்பினர். வேனில் இருந்து கீழே இறங்கிய சபரிநாத், சூரியநாத் ஆகியோர் அந்த வேனின் முன்பக்கம் வழியாக சாலையை கடக்க முயன்றனர். இதனை கவனிக்காத டிரைவர் திடீரென வேனை இயக்கியுள்ளார். இதில் 2 பேரும் எதிர்பாராதவிதமாக வேனின் சக்கரத்தில் சிக்கி கொண்டனர். இதில் சூரிய நாத் பரிதாபமாக இறந்தான்.

படுகாயமடைந்த சபரிநாத் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபரிநாத் அபாயக் கட்டதைத் கடந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஓட்டுனர் உரிமம் ரத்து...

இதற்கிடையே மகன் உயிரிழந்த சம்பவம் அறிந்த சதீஸ் குமார் வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு நேற்று காலையில் ஊருக்கு வந்தார். அவரும் அவரது மனைவியும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

இந்த விபத்து தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பொன்மனையைச் சேர்ந்த ஜார்ஜை (52) கைது செய்தனர். அவரது ஓட்டுனர் உரிமைத்தை ரத்து செய்யவும், வேனை ஆய்வுக்கு உட்படுத்தி சாலையில் இயக்குவதற்கு தகுதியுடையதா? என பரிசோதிக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story