போலீசார் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும்


போலீசார் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:30 AM IST (Updated: 28 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும்

கோயம்புத்தூர்

கோவை

போலீசார் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க வேண்டும் என்று பயிற்சி காவலர்களுக்கு ஐ.ஜி. அறிவுரை வழங்கினார்.

போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

கோவையில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் போலீசாருக்கு பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு புதிதாக தேர்வு செய்யப்படும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ் பயிற்சி பிரிவு ஐ.ஜி. தமிழ்சந்திரன் கோவை வந்தார்.

பின்னர் அவர் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீசார் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதுடன், பயிற்சி பள்ளி கட்டிடங்கள், அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

பரிசு வழங்கி பாராட்டினார்

தொடர்ந்து போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர்களை சந்தித்து பேசியதுடன், அதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர்கள் மத்தியில் ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன் பேசும்போது கூறியதாவது:-

போலீஸ் என்பது பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் முக்கிய துறை ஆகும். எனவே நீங்கள் அதை கவனத்தில் வைத்து மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். முக்கியமாக உடல்நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஏனென்றால் இந்த துறையில் சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாது. நேரம் தவறி சாப்பிடுவதுதான் அதிகம் இருக்கும்.

கட்டுக்கோப்புடன் வைக்க வேண்டும்

நீங்கள் இப்போது எப்படி உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைக்கிறீர்களோ அதுபோன்று ஓய்வு பெறும் வரை உடலை கட்டுக்கோப்புடன் வைக்க வேண்டும். மேலும் நீங்கள் விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது எவ்வித பிரச்சினைகளுக்கும் செல்லக்கூடாது. அதுபோன்று வேலையில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

ஏதாவது தவறு செய்தால் பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகிவிடும். அதுபோன்று போலீஸ் நிலையத்தில் பணியில் நியமிக்கப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவர்களை நடத்த வேண்டும். அத்துடன் குற்றவாளிகளை அழைத்துச்செல்லும்போது தப்பவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வரும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுமான செட்ரிக் மனுவேல் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story