சென்னை போராட்டத்திற்கு புறப்பட்ட நரிக்குறவர் இன மக்களை தடுத்த போலீசார்
சென்னை போராட்டத்திற்கு புறப்பட்ட நரிக்குறவர் இன மக்களை போலீசார் தடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலை பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு பிழைப்புக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட விவசாய நிலங்களை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் பல முறை கேட்டும், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தியும் மாவட்ட நிர்வாகம் நரிக்குறவர்களுக்கு அந்த நிலங்களை மீண்டும் வழங்கவில்லையாம். இதனால் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்து, மலையப்ப நகர், சர்க்கரை ஆலை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்வதற்காக நரிக்குறவர் இன சமுதாய மக்கள் வாகனங்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீசார் நேற்று இரவு அந்த மக்களை தடுத்து நிறுத்தி போராட்டத்திற்கு செல்லக்கூடாது என்று கூறி வருவதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.