காழ்ப்புணர்ச்சியில் என்மீது பொய் புகார் அளித்துள்ளார்கள்
மேயா் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியில் என்மீது பொய் புகார் அளித்து உள்ளார்கள் என்று கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் விளக்கம் அளித்து உள்ளார்.
மேயா் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியில் என்மீது பொய் புகார் அளித்து உள்ளார்கள் என்று கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் விளக்கம் அளித்து உள்ளார்.
தள்ளுவண்டி கடை
கோவை மணியகாரன்பாளையம் கக்கன் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். தி.மு.க. நிர்வாகியான இவர் மணியகாரன்பாளையம் அம்மா உணவகம் அருகே சாலையோரத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கடைக்கு கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் வந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாகவும், அருகே இருக்கும் மாநகராட்சி கழிவறையை பராமரித்து நடத்தி மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு மீதியை வைத்து கொள்ளுங்கள் என கூறியதாக வும் நேற்றுமுன்தினம் கோவை கலெக்டரிடம் பரபரப்பு புகார் மனு அளித்து இருந்தார்.
மேயரின் கணவர் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்கள் குடும்பம் 3 தலைமுறையாக தி.மு.க.வில் உள்ளது. எனது தந்தை மிசாவில் சிறைக்கு சென்றார்.
எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக எனது மனைவி கல்பனாவை மேயராக மக்கள் பணியாற்றிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி வாய்ப்பு அளித்தார்கள்.
அதை சரியான முறையில் செய்து வருகிறோம். தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் சிலரது தூண்டுதலின்பேரில் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரும் வகையிலும், எங்கள் மீதும் தேவையில்லாத புகார்களை பரப்பி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 26-ந் தேதி என்மீது ரங்கநாதன் என்பவர் கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.
உண்மைக்கு புறம்பானது
அந்த மனுவில் என்மீது கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.
ஏற்கனவே பொதுமக்கள் பொதுக் கழிப்பிடத்துக்கு இடையூறாக கடையில் சமூகவிரோத செயல்கள் நடப்பதாக மாநகராட்சியில் புகார் அளித்ததன் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதுதொடர்பாக விசாரணை நடத்த சரவணம்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்து உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ரங்கநாதனின் தள்ளுவண்டி கடை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் மாநகராட்சி ஊழியர்களால் நேற்று வைக்கப்பட்டது.