10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு அனைத்தும் தற்போது மாறி உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையில் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஆசிர்வாதத்துடனும் நிதியுதவிகளுடனும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல ஆயிரம் கிராமப்புற வறியநிலை இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்து தேசப் பணி செய்து வருகிறது.
தேசிய இலக்கான அமிர்தகாலத்துடன் அது தனது அடுத்த 25 ஆண்டுகால பயணத்தை இணைத்து, நமது இளைஞர்கள் மற்றும் பெண்சக்தியின் பொதிந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.
2030-ம் ஆண்டுக்குள் நமது தேவைகளை 50 சதவீதம் பூர்த்தி செய்ய இயற்கை எரிசக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் தற்போது மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.